ஒரு தாய் பிள்ளைகள் என்றாலும் நாம் இருவரும் இரு துருவங்கள்.
எனக்கு 15 வயது இருக்கும்.
வண்ணாத்தி, தங்கம், அழுக்கு துணி எடுக்க வந்திருந்தார்கள்.
எப்பொழுதும் போல கிண்டலும், கேலியுமாக பேசிகொண்டுருந்தாய்.
நான் எரிச்சலாக “ஏன் நேற்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை” என்று அவர்களிடம் விவாதித்துகொண்டிருந்தேன்.
அவர்கள் சென்றவுடன், “தங்கத்திடம் ஏன் கோபப்பட்டாய்” என்று கேட்டாய்.
“பின்ன என்னா…வருகிரேன் என்று சொல்லிவிட்டு, வராவிட்டால், கோபம் வராதா”.
ஏழை வண்ணாத்தியிடம் நேரம் தவறாமையும், சொன்ன சொல்லை காப்பாத்துவதையும் எதிர்பார்த்த முட்டாள்தனத்தை பின்னாளில் உணர்ந்தேன்.
இப்படியாக, நான் எதிலும் சீரியஸ்.
நீ எல்லாவற்றிலும் ஜாலி.
நான் சிந்தித்து எதையும் செய்வேன்.
நீ செய்து விட்டு சிந்திக்கலாம் என்று நினைப்பாய்.
நீ எளிதில் கோபப்பட்டு விடுவாய்.
நான் கோபப்படுவது அரிது.
நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டேன்.
நீ வீட்டிலேயே இருக்க மாட்டாய்.
நான், மனதிற்குள் பேசிக்கொள்வேன்.
நீ, மனிதர்களோடு, மனம் விட்டு, பேசுவதையே விரும்பினாய்.
“எதற்கு வீண் வம்பு, நேர விரயம்”, என்று மனிதர்களை தவிர்த்தேன். புத்தகங்கள்தான் எனக்கு நண்பன்.
மேரி என்னை “ஜனம் சேராதவன்” என்று சொல்லும்.
மனிதர்களும், அதன் மூலம் கிடைக்கும் உலக அனுபவங்கழும் உன்னை ஈர்த்தன.
எல்லோரிடமும் எளிதில் பழகி விடுவாய்.
நான் யாரிடமும் எளிதாக பழகி விட மாட்டேன்.
யாரு, எந்த sideல இருந்து குத்துவார்கள் என்று, முன் ஜாக்கிரதையோடு இருப்பேன். யாரையும் எளிதில் நம்ப மாட்டேன்.
எல்லோரும் நல்லவர்கள், பாவம் என்று நினைப்பாய், நீ.
உன்னை தவிர, அருகில் உள்ள அனைவருக்கும் ஏமாற்றுகிறார்கள் என்று தெரியும்.
பல நேரங்களில் ஏமாற்றுபவர்களுக்கு ஆதரவாக பேசி உடன் இருப்போரை கடுப்பேத்துவாய்.
பல மனிதர்களை சந்தித்த உன்னால் எப்படி இவ்வளவு எளிதாக ஏமாற முடிகிறது என்று ஆச்சர்யமாக இருக்கும் எனக்கு.
இயில்பிலேயே, இந்த உலகில் உள்ள அனைவரும் நல்லவர்கள் என்று நினைக்கும், அப்பாவியாக இருந்தாய்.
அதிர்ந்து பேச மாட்டேன், நான்.
அதிராமல் பேச மாட்டாய், நீ. சத்தமாக பேசுவதையே விரும்பினாய்.
நீ ஒரு பிறவித் தலைவன்.
எங்கு போனாலும், எல்லோர் கவனமும் உன் மேல் குவிந்து நடு நாயகமாக இருப்பாய்.
தவறிப்போய் என் மேல் கவனம் குவிந்தால், கூசுவேன்.
ஓரமாக, கூட்டத்தில் ஒருவனாக இருக்கவே விரும்புவேன்.
இயற்கையிலேயே நாம் இரு துருவங்களாக படைக்கப்பட்டுள்ளோம் என்பது விசித்திரம்.
வாழ்க்கையை நீ எப்பொழுதும் சீரியஸ் ஆக எடுத்ததில்லை.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தாய்.
வாழ்க்கையை அதன் எல்லை வரை சென்று ரசித்து, ருசித்து வாழ்ந்த சுகவாசி!!
பயணங்கள், சினிமாப் படங்கள், பெண்கள், தண்ணி, சிகரெட், சூதாட்டம், திருவிழா, கூத்து, நாடகம் என்று வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த கலா ரசிகன்.
“நான் இந்த பூமியில் பிறந்தது, வாழ்க்கை கொடுக்கும் எல்லா இன்பங்களையும் அதன் கடைசி சொட்டு வரை குடித்து சுவைக்கத்தான்.
பொறுப்புகளை சுமக்க வேண்டியது மற்றவரது வேலை. அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.”
இது சமூகத்தால் ஏற்றுகொள்ளக் கூடிய ஒன்றா, சரியா, தவறா, என்பதை தாண்டி, இதுதான் உன்னுடைய வாழ்க்கைத் தத்துவமாக இருந்தது.
இதில், நீ, எந்த வித சமரசமும் செய்துகொள்ளவில்லை.
உன்னுடைய இந்த வாழ்க்கைத் தத்துவத்தில் உடன்பிறந்தவர்களுக்கு ஒப்புதல் இல்லை என்றாழும், அம்மா, அப்பாயி, விண்ணரசி என்ற மூன்று பெண்களும் உன்னை சகித்து, ஏற்று கொண்டார்கள்.
சிறு வயதில், நோய் வாய்ப்பட்டு, பேச முடியாமல் இருந்த நீ, உயிரோடு இருப்பதே மிகப் பெரிய அற்புதமாக இருந்தது, அவர்களுக்கு.
ஆலயத்தில் இருந்து வரும் ரேடியோ சத்தம் கேட்டு, ஞாயுற்றுக் கிழமை என்று தெரிந்து, வாயில் விரலை வைத்து கடித்துக் காட்டி, கறி எடுக்க சொல்லுவியாம்.
நீ, உயிரோடு இருந்தால் போதும் என்றே அம்மாவும், அப்பாயும் நினைத்தார்கள்.
ஊருக்கு உழைப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது.
“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாய் வளரும்” என்று நம்பினாய்.
வாழ்க்கை வாழ்வதற்குதான் என்று உணர்ந்து, முழுமையாக வாழ்ந்த, கவலையில்லா மனிதன்.
நிற்காமல், கட்டற்று, ஓடிய காட்டாறு.
எந்தவித கட்டுப்பாடும், உனக்கு பிடித்ததில்லை.
உணவுக் கட்டுப்பாடு, பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு என்று எதையும் நீ விரும்பியதில்லை.
ஒரு இடத்தில் இருக்க மாட்டாய்.
ஒரு கணம் வீட்டில் இருப்பாய், மறு கணம் காணாமல் போய் விடுவாய்.
“இங்கதான இருந்தான்” என்று எல்லோரும் தேடுவார்கள்.
அவசரமாக, வேகமாக, எங்கோ ஓடிக் கொண்டே இருந்தாய்.
யாருக்காகவும் உன்னை நீ மாற்றிக்கொள்ளவில்லை.
இதுதான் உன்னுடைய பலமும், பலவீனமும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.
அளவோடு வாழ்கையை ரசித்திருக்கலாம்.
அம்மா, அப்பாயி, அய்யாப்பன் அனைவரும் 85 வயதுக்கு மேல் வாழ்ந்தார்கள்.
கொஞ்சம் உடம்பை கவனித்து, கட்டுப்பாட்டோடு இருந்திருந்தால் 100 வயது வாழ்ந்திருக்கலாம்.
எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியதுதான்.
ஆனால், என் அண்ணன் போக வேண்டிய நேரமில்லையே இது.
சிறு வயதில் இருந்தே உனக்கு ஆஸ்த்மா இருந்திக்கிறது.
சிகரட்டை நீ தொட்டிருக்கவே கூடாது.
காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நுரைஈரலை மிகவும் பாதித்து விட்டது.
நான் உனக்கு பணம் கொடுத்த நாட்களை ஒரு கையில் எண்ணி விடலாம்.
உனக்கு கொடுத்தால் வீண் செலவு செய்து விடுவாய் என்று நினைப்பேன்.
குடும்பத்துக்கு செய்வது உனக்கு செய்வதாக நினைத்து சமாதானம் ஆகிவிடுவேன்.
தவறாக பேசிவிடக்கூடாது என்று, மனதில் ஒரு முறை ஓட்டி பார்த்து விட்டு பேசுவேன்.
இதனாலேயே எனக்கு சரளாமாக பேச வராது.
ஆனால், நீயோ, மனதில் பட்டதை சரளமாக, வெளிப்படையாக பேசி விடுவாய்.
இதனாலயே, பல சமயங்களில், பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வாய்.
ஆனால், அதை பற்றி எல்லாம், என்றைக்கும் கவலைப் பட்டதில்லை.
நீ, நீயாகவே வாழ்ந்தாய்.
யாரிடம், எப்பொழுது, எப்படி பேசினால் உனது காரியம் நடக்கும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தாய்.
“முறைகள் அடையாளம் காணல்” (Pattern Recognition) என்பது ஒரு வகையான அறிவுத்திறன்(Intelligence). அது உனக்கு இயல்பிலேயே இருந்தது.
பேசுவது, நடப்பது என்று எதிலும் வேகம்.
வேகமாக பேசுவதால், பல வார்த்தைகளை, சரியாக, தெளிவாக உச்சரிக்க மாட்டாய்.
மற்றவர்கள், கேலி செய்வார்கள்.
ஆனால், அதையெல்லாம் நீ, சட்டையே செய்ததில்லை.
எல்லோரையும் உரிமையாக, “மாமா”, “மாப்ள”, மச்சான்”, “பங்காளி”, “சகல”, என்று முறை சொல்லித்தான் பேசுவாய்.
ஒரு பக்கம், தோள்பட்டையை சாய்த்து, இரண்டு கைகளையும் வீசி, விடுக்கு, விடுக்கு என்று நீ வேகமாக நடப்பதே தனி அழகு.
இத்தனை வேகம் சாவிலும் வேண்டுமா?
நீ மிகச் சிறந்த கதை சொல்லி!!
நீ சொல்லும் கதைகளை பல நேரங்களில் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
பிறருடைய நடவடிக்கைகளை உண்ணிப்பாக கவனித்து பட்ட பெயர் வைப்பது, பேசிக்காட்டுவது, நடித்துக்காட்டுவது என்று திறமைசாலி.
“உள்ளம் என்பது ஆமை” என்ற பாடலை அருமையாக பாடுவாய்.
யாருக்கும், யோசிக்காமல் இருப்பதை கொடுத்துவிடும் தாராள, ஈர மனசு உனக்கு.
எல்லோர்க்கும் பாவம் பார்ப்பாய்.
நீ அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் – “பாவம்பா அவன்”
நியாயவாதி, மனிதாபிமானி.
எல்லோரிடமும் கிண்டலாக, கேலியாக, தமாஷாக, பேசும் ஜாலியான மனுஷன் நீ.
நீ எங்கு சென்றாழும் நண்பர்கள் இருந்தார்கள்.
ஷான், ஒருமுறை, நீ பலரிடம் பேசுவதை பார்த்துவிட்டு, “பெரியப்பாவுக்கு நிறைய பேரை தெரிந்திருக்கிருது” என்றான்.
உன் தம்பி அமெரிக்காவில் இருப்பதில் உனக்கு அளவிலாப் பெருமை.
என்னை, எல்லோரிடமும், “இது என் தம்பி! அமெரிக்காவில் இருக்கிறான்.” என்று அறிமுகம் செய்வாய்.
என் சிறு வயதில், வீட்டுக்கு வரும் வெள்ளைச் சேலை நர்ஸ்களிடம், “என் தம்பி பெரிய அறிவாளி. என்ன கேள்வி கேட்டாலும் சொல்வான். நீங்க வேணா கேளுங்களேன்”
என்று பெருமையாக சொல்லுவாய்.
கேள்வி கேட்டு, பதில் தெரியாவிட்டால், என்ன செய்வது என்று எனக்கு உதறல் எடுக்கும்.
நல்ல வேலையாக, எந்த பெண்ணும் கேள்வி கேக்கவில்லை.
ரெஜி அக்காளை, “என் தங்கச்சி இது. Government School HM ஆ இருக்கு” என்று பெருமையோடு அறிமுகம் செய்வாய்.
விண்ணரசி, “மாமாவுக்கு, சட்னி, கையாள அரைச்சாதான் பிடிக்கும்.” என்று கையில் அரைச்சுதான் சட்னி செய்து தரும்.
அப்பாயி, அம்மா, விண்ணரசி என்று மூன்று பெண்களுக்கும், நீ செல்லப்பிள்ளை.
உன்னை தங்கமாய் தாங்கினார்கள்.
படுத்த படுக்கையாய் இருந்து விண்ணரசியை கஷ்டபடுத்த வேண்டாம் என்று நினைத்தாயா?
மாமா, மாமா என்று உயிரை விடும், விண்ணரசி உன்னை தங்கமாய் தாங்கி இருக்குமே.
விண்ணரசி, நீ பேசுவதை, சிரிப்பதை, எப்போதும் பெருமையாக, பெருமிதமாக பார்த்து கொண்டிருக்கும்.
அன்பான, பொறுப்பான மனைவி கிடைத்தது, உனக்கு கிடைத்த வரம்.
உன்னை தலையில் வைத்து கொண்டாடியது விண்ணரசி.
13 வயதில் கல்யாணம் முடித்து வந்த, விண்ணரசி, அக்காள் மகள் என்றாலும், எனது உடன் பிறவா தங்கை.
47 வயதில், தனிமரமாக நிற்கும் அவளுக்கு நான் என்னவென்று ஆறுதல் சொல்லுவேன்.
நீ, விண்ணரசி அழுதாள் தாங்க மாட்டாய். அழ வைத்தவர்கள் உடன் பிறந்தவர்கள் என்றால் அவர்களோடு சண்டை போடுவாய்.
விண்ணரசி சொன்ன ஜோக்கை எல்லாரிடமும் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தாய்.
“மாமா, பெட்டி கடைக்காரரு காசு கேக்குறாரு”
“காசு கேட்டா நெஞ்ச காட்டுடி”
“நீங்க காட்டுவீங்க, நான் காட்ட முடியுமா”
மேரி கேலியாக, “ஜோசா, கலைஞர், சிவாஜி சொல்லு” என்று கேக்கும்போதல்லாம், வெள்ளந்தியாக, “ஜிவாஜி, கலஞ்சைர்” என்று சொல்லுவாய்.
சிறு வயதில், என்னை ஏமாற்றி, தமாஷ் பண்ணி, விளையாடுவதில் உனக்கு சந்தோசம்.
“தம்பி, படம் மாத்திட்டாங்க…மாவீரன் படம் போட்டிருக்காங்க.”
“பொய் சொல்ற…”
“நான் எதுக்குப்பா பொய் சொல்ரேன். நீ வேணா போய் poster பாருப்பா”
நான் வேகமாக ஓடி பார்ப்பேன். படம் மாத்தியிருக்கமாட்டார்கள்.
சில சமயங்களில் உண்மையாகவே படத்தை மாற்றி இருப்பார்கள்.
அதற்காகவே ஒவ்வரு தடவயும் ஓடுவேன்.
“டேய்…நீ எடுப்பார் கை பிள்ளைடா” என்று வெறுப்பேத்துவாய்.
நான் அப்பாயிடம், “அம்மா, எடுப்பார் கை பிள்ளைன்னா என்ன” என்று சோகமா கேட்பேன்.
“டேய்…உன்னை தவிட்டுக்கு வாங்குனோம்” என்று சொன்னதை நம்பி பல நாள் சோகமாக இருந்திருக்கிரேன்.
2 வருடமே மூத்தது என்றாலும், “Flora அக்கா” என்றுதான் கூப்பிடுவாய்.
“சம்பந்தி, மாரியம்மா” என்று இனி யார் கூப்பிட போகிறார்கள்.
இன்னும் பல வருஷங்கள் நீ இருந்திருக்கலாம்.
திடீரென்று சென்றுவிட்டதை மனசு ஏற்க மறுக்கிறது.
தூரத்தில் இருக்கும் என்னாலயே தாங்க முடியவில்லை.
32 வருடங்கள் கூடவே இருந்த விண்ணரசியாலும், குழந்தைகளாலும் உன்னுடைய இழப்பை ஈடு செய்யவே முடியாது.
உன் சிரித்த முகத்தை இனிமேல் பார்க்க முடியாது என்று நினைத்து, அழுகை வருகிறது.
இது கனவாக இருக்கக் கூடாதா என்று மனசு ஏங்குகிறது.
“என் பிள்ள இருக்கிற இடம் கலகலப்பா இருக்கும்” என்று அம்மா பெருமையாக சொல்லுவார்கள்.
அம்மா, இருந்திருந்தால், உன்னுடைய இழப்பை அவர்களால் தாங்கி இருக்க முடியாது.
அம்மா போன பிறகு, உன்னுடைய மிகப்பெரிய பக்கபலம் போனதாக நினைத்திருக்கிறாய்.
அதுவே உன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விட்டது.
உன்னை கடைசியாக, வழி அனுப்ப ஆயிரக்கனக்கானோர் வந்திருப்பார்கள்.
இதுதான், உன் வாழ்க்கையில் நீ சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து.
ஆர்வமாக, உற்சாகமாக, ஆரவாரமாக பேசும் உன் முகம்தான் என் நினைவில் எப்போதும் இருக்கும். இருக்க வேண்டும்.
இதனால்தான், உன்னை கடைசியாக பார்க்க வரவில்லை.
“அண்ணே” என்று உரிமையோடு கூப்பிட, எனக்கு இனி யாரும் இல்லை.
போய் வா, அண்ணா!!


