பல ஆண்டுகள் ஆசிரியையாகப் பணியாற்றி, இப்போது ஓய்வு பெறும் அன்பான ரெஜி அக்காவுக்கு, அன்புத் தம்பி அன்புவின் மனமார்ந்த வாழ்த்துகள்.
சிறு வயதில் நான் கருங்குளம் வரும்போதெல்லாம், பாவாடை சட்டை போட்டுக்கிட்டு, சைக்கிள்ல எப்போதும் வெளியிலேயே சுற்றிக்கொண்டிருப்பாய்.
Choir class-ல busy-ஆ இருப்பாய்.
படிப்புல அப்போது பெரிய ஆர்வம் காட்ட மாட்டாய்.
ஆனா இன்று?
முதுகலை பட்டம் பெற்று, தலைமை ஆசிரியை ஆகி, நல்லாசிரியர் விருது பெற்று, பல வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெறுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.
கடந்த முறை இந்தியா வந்தப்போ, “உன்னை பார்க்கும் பொழுது, முயல் ஆமை கதைதான் எனக்கு ஞாபகம் வருது”ன்னு சொன்னேன்.
அதுக்கு நீ “முயலோ, ஆமையோ… முயலாமைத்தான் தப்பு”ன்னு சொன்னாய்.
பள்ளிப் படிப்பு முடிச்சதுக்கப்புறம், ஒரு வருடம் திருப்பரங்குன்றத்துல தங்கி shorthand படித்தாய்.
Secretary ஆகணும் என்ற எண்ணம் இருந்திருக்கும்.
ஒரு முறை அப்பா உன்னிடம் ஆங்கிலத்தில் dictation கொடுத்து உன் shorthand-ஐ சோதித்தார்.
அப்போது எனக்கு, “அப்பாவுக்கு எப்படி shorthand தெரியும்?”ன்னு வியப்பாக இருந்தது.
எல்லா தந்தைகளுக்கும் தன் பிள்ளைகள், பெரிய அறிவாளியாகி, நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஏக்கமும், ஆர்வமும் இருக்கும்.
இந்த குணத்தை, அப்பாவிடம் மிக தெளிவாக காணலாம்.
எல்லா குழந்தைகளையும் இப்படி சோதிப்பார்.
நான் பள்ளி முடிச்சு வந்த உடனே, “இன்னைக்கு என்ன புதுசா கத்துக்கிட்டே?”ன்னு கேப்பார்.
“எதுவும் இல்லை”ன்னு சொன்னா, “ஒரு திருக்குறள் படி… இல்லனா ஒரு புதிய ஆங்கில வார்த்தையாவது கற்றுக்கொள்… ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்”ன்னு சொல்வார்.
அம்மா எப்பொழுதும், “என் பிள்ளைகளுக்கு, ஒரு government அட்டை வாங்கி கொடுத்துவிட்டேன் என்றால், அவர்கள் பிழைத்து கொள்வார்கள்” என்பார்கள்.
அந்த வார்த்தை, உன் வாழ்க்கையில் முற்றிலும் உண்மை.
பெரம்பலூர்ல teacher training படித்தாய். அதுக்கப்புறம் சத்திரப்பட்டியில் வேலை கிடைத்தது.
அந்த ஊர் மக்களுக்கெல்லாம் பிடித்த செல்லப் பிள்ளையாக இருந்தாய்.
முதல் வேலையில் கிடைத்த சம்பளத்திலே கொசவபட்டி வீட்டை சீரமைக்க அம்மாவிடம் பணம் கொடுத்தாய்.
அன்றிலிருந்து அம்மாவின் கடைசி நாள்வரை அவர்களுக்கு பக்கபலமாக இருந்தாய்.
அம்மா ஆசைப்பட்டதால் ரீட்டா அக்காவும் நீயும் சேர்ந்து அம்மாவுக்கு வீடு கட்டிக்கொடுத்தீர்கள்.
பையனாக நான் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, பெண் பிள்ளைகள் நீங்கள் முன்னின்று செய்து காட்டினீர்கள்.
அம்மா மிகுந்த சந்தோஷமும், பெருமிதமும் அடைந்தார்கள்.
“ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்”ன்னு பழமொழி உண்டு.
ஆண்டி ஆகலாம்… ஆனா அனாதை ஆக மாட்டான்.
பெண் பிள்ளைகள் எங்கே போனாலும் தங்கள் பிறந்த வீட்டை மறக்க மாட்டாங்க;
விட்டுக்கொடுக்க மாட்டாங்க.
தங்களிடம் இல்லையென்றாலும், தங்கள் வீட்டுக்காரரிடம் சண்டை போட்டு, கோபப்பட்டாவது தங்கள் குடும்பத்துக்கு உதவி செய்வாங்க.
ஒரு பெண்ணை கோபப்படுத்தணும்னா, அவளுடைய குடும்பத்தைப் பற்றி தப்பா பேசினாலே போதும்.
அம்மாவைப் பற்றி சொல்லும்போது எல்லா பிள்ளைகளும் “அம்மா சமைப்பதை ரொம்பக் குறைவாகத்தான் பார்த்திருக்கோம்”ன்னு சொல்லுவாங்க.
அம்மா வெளி வேலைகளில், ஆசிரியப் பணியில் ஆர்வமா இருந்த ஒரு career woman. அதுபோலத்தான் நீயும்.
வீட்டுக்குள் அடைபட்டு, வீட்டு வேலை செய்வதில் உனக்கு பெரியதாக ஆர்வம் இருந்ததில்லை.
வெளியே போய் சாதிக்கணும் என்ற எண்ணம்தான் அதிகம்.
தைரியம், வைராக்கியம், மனோதிடம் உனக்கு அதிகம்.
அம்மாவும் அப்படித்தான். ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்கன்னா, எல்லா தடைகளையும் தாண்டி அதை முடிக்காம ஓய மாட்டாங்க.
அந்த குணம் உனக்குமே அப்படியே இருக்கு.
அம்மாவைப் போலவே உனக்கும் பயணத்தில ரொம்ப ஆர்வம்.
நான் எப்பொழுது ஊர் வந்தாலும், எனது பயணத்துணை நீயும் ஐஷுவும்தான்.
கேழ்வரகு கஞ்சி குடிச்சா sugar குறையும் என்று, சுயக்கட்டுப்பாட்டோடு தினமும் கேழ்வரகு கஞ்சி சாப்பிட்டு அம்மா சர்க்கரையை கட்டுப்படுத்தினார்கள்.
அம்மா போலவே சுயகட்டுப்பாடு உனக்கு இயல்பாகவே இருக்கிறது.
பிறந்ததிலிருந்து சாப்பிட்டு வந்த மாமிச உணவை ஒரு நாள்ல திடீர்னு நிறுத்திட்டாய். அது சாதாரண விஷயம் இல்லை.
அம்மாவின் தோற்றமும், குணமும் உன்னிடமிருப்பதால, எனக்கு நீ இன்னொரு அம்மாவைப் போலத்தான் தோன்றுவாய்.
80களில், Flora அக்கா மூணாறில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அக்காவைப் பார்க்க திடீர்னு கிளம்பிட்டாய்.
Phone number இல்லை, address இல்லை, மொழி தெரியாது, ஆங்கிலமும் சரியாக தெரியாது.
மூணாறு பக்கத்தில ஒரு கிராமத்தில் வேலை செய்கிறது என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது.
பஸ்ஸில் உன்னைப் பார்த்த யாரோ ஒருவர், “நீங்க எங்க ஊரு teacher மாதிரி இருக்கீங்க”ன்னு சொன்னார்களாம்.
நீ “என் அக்காவைப் பார்க்கத்தான் போறேன்”ன்னு சொன்னபிறகு, அவர்கள், உன்னை அக்காவிடம் பத்திரமாக சேர்த்துள்ளார்கள்.
உணவுக் கட்டுப்பாடு, நடப்பது, இயற்கை உணவு, உடல்நலம்—இவைகள்ல உனக்கு எப்போதும் அக்கறை அதிகம்.
“உணவே மருந்து”, “இயற்கை மருத்துவம்”, “இயற்கை வேளாண்மை” மாதிரியான விஷயங்கள்ல எனக்கும் ஆர்வம் இருப்பதால் அதைப் பற்றி நாம அடிக்கடி பேசுவோம்.
“பெரிய ஆளாகணும்… நிறைய சாதிக்கணும்… நிறைய பணம் சம்பாதிக்கணும்” என்ற உந்துதலும் உழைப்பும் உனக்கு எப்போதுமே உண்டு.
எப்போதும் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்கணும் என்று நினைப்பாய்.
ரகசியம் காப்பாய். உன்னிடம் ஒரு விஷயம் சொன்னா, யாரிடமும் சொல்ல மாட்டாய் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.
நல்லம்மா உன்னை “அழுத்தக்காரி”ன்னு திட்டுவாங்க.
எவ்வளவு அடித்தாலும், அலுங்காமல், குலுங்காமல், அசையாமல் அதே இடத்துல நிற்பாய்.
தள்ளினாலும், spring போல பழைய இடத்திற்கு வந்து விடுவாய்.
நல்லம்மா இருந்திருந்தா, உனது வளர்ச்சியை, சாதனையை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
ஒரு சண்டையில், நல்லம்மா, நல்லப்பாவோடு பேச்சு வார்த்தை இல்லை.
அப்போது நித்யா பிறந்திருந்தாள்.
கைக்குழந்தை நித்யாவைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த நீ, easy chair-ல இருந்த அப்பாவிடம் சிலுவை வாங்கிக் கொள்ள அவரருகே மண்டியிட்டு,
வைராக்கியமாக, ரொம்ப நேரம் நின்ற காட்சி இன்னும் ஞாபகம் இருக்கு.
கடந்த Christmas சமயத்தில் உன்னிடம் பேசும்போது, “அப்பாவிடம் சிலுவை வாங்கப் போவியா?”ன்னு கேட்டேன்.
“ஆமாம், போவேன்; சிலுவை போட்டு காசு கொடுப்பார்”ன்னு சொன்னாய். அதை கேட்கவே சந்தோஷமாயிருந்தது.
2 வயது இருக்கும்போதே நன்றாக பேசும், சூட்டிகையான குழந்தையாக இருப்பயாம்
அதைப் பார்த்த நல்லம்மா, “நான் தூக்கிட்டு போகிறேன் பிலோமி, குழந்தை அழுதா திருப்பி கொண்டுவந்து விடுறேன்”ன்னு சொல்லி தூக்கிச்சென்றார்களாம்.
உன்னைப்போலவே சத்தமா, வெள்ளந்தியாக, துடுக்குத்தனமா, பேசுன சிறு வயது நித்யா ஞாபகத்துக்கு வருகிறாள்.
1999-ல இந்தியா வந்திருந்தப்போ அத்தை, “உங்க மாமா என்ன வாங்கி வந்தார்?”ன்னு கேட்டதுக்கு, நித்யா, “ஷெல்லா காசும், ஷெண்ட்டும்”ன்னு சொன்னாளாம்.
Easter, Christmas, பிறந்தநாள், என்று எந்த விசேஷ நாளாக இருந்தாலும் எனக்கு முதலில் வாழ்த்துச் சொல்லும் பெண் அவள்தான்.
உன்னைப்போலவே பாசமான குழந்தை.
அவளுக்கு பாசமான பையன் கணவனாக கிடைத்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
மிகுந்த பாசமாக, “சித்தப்பா” என்று அழைத்து பேசுவார் பிரதாப்.
நம் வீட்டுக்கு வந்த மருமகன்கள் Prince, Roy, Sathish, Prathap, Christopher என்று அனைவருமே பாசமான பிள்ளைகள்.
எனக்கு ஏதாவது உடல் நலப் பிரச்சனை இருந்தா முதலில் நான் கூப்பிடுறது Prince-ஐதான்.
“ஏதாவது பிரச்சனை என்றால் மட்டும் கூப்பிடுகிறோம்” என்று குற்ற உணர்வாக இருக்கும்.
கடந்த முறை பபியிடம் பேசும்போது, “குடு, நான் uncle-கிட்ட பேசுறேன்”ன்னு Roy பேசினார்.
யாரிடமும் எளிதா பேசாத Roy என்னிடம் பேசினது எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
Sathish-கிட்டயும் அடிக்கடி பேசுவேன்.
எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தைகள் தன்னோடு வீட்டோடு இருந்து விட வேண்டும் என்பதுதான் ஆசை.
நித்யா வையம்பட்டியில், கருங்குளத்தில் இல்லையேன்னு வருத்தப்படாதே.
கூப்பிட்டால் வரும் தூரத்தில்தான் இருக்கிறாள்.
அதுமட்டும் இல்ல, ரம்மி, பபி, ரித்திகா என்று உன்னைச் சுற்றி பாசமான பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
நாம் பல நேரங்களில் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு, நிகழ்காலத்தில் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ மறந்துவிடுகிறோம்.
ஒரு காலக் கட்டத்தில் பாடுவதில் விருப்பம் ஏற்பட்டு நன்றாக பாட ஆரம்பித்தாய்.
ஒரு நோட்டு வைத்து, பாட்டு எழுதி எப்பொழுதும் பாடிக் கொண்டே இருப்பாய்.
“நேயர் விருப்பம்”ன்னு மற்றவர்களுக்குப் பிடித்த பாடலையும் பாடுவாய்.
ஆனா ஏனோ ஒரு கட்டத்தில் பாடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டாய்.
நீ கோபப்படுறது ரொம்ப அரிது. உனக்கு பொறுமை அதிகம்.
கோபப்பட்டு அழுவது, கத்துவது, ஆர்ப்பாட்டம் செய்வது—இந்த மாதிரி நான் உன்னிடம் பார்த்ததே இல்லை.
எதையும் பார்த்து பதறாமல் இருக்கிற ஒரு தன்னம்பிக்கையும் மனோபலமும் உன்னிடம் இருக்கு.
சுத்தம், சுகாதாரம்—இவைகளுக்கு நீ ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாய்.
யாராவது சுத்தமாக, சுகாதாரமாக இல்லையென்றால் எரிச்சல்படுவாய்.
ஒரு நாள், ஹோட்டல்ல குழம்பையும் டீயையும் plastic bag-ல ஊற்றி கொடுப்பதைக் பார்த்து, “இப்படி plastic bag-ல போட்டுக் கொடுத்தா உடம்புக்கு ரொம்பக் கெடுதி”ன்னு சொன்னாய்.
“ஆமால்ல… அக்கா சொல்வது சரிதான்… இதை எப்படி நாம இவ்வளவு நாள் யோசிக்கல?”ன்னு நினைத்தேன்.
நீ சொன்னதிலிருந்து இப்போ டீ கூட plastic cup-ல குடிக்க தயக்கமா இருக்கு.
English பேச கற்றுக்கொள்ளணும் என்ற தீராத ஆசை உனக்கு.
Shawn ஆங்கிலம் பேசுவதை வியப்பாக பார்த்துக்கொண்டு இருப்பாய்.
“கஷ்முஷ் கஷ்முஷ்னு வாய்க்குள்ளயே பேசுறாப்புல . நமக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குது” என்று வியப்பும், பெருமையும் கலந்து சொல்வாய்.
யாராவது “அதெல்லாம் முடியாது”ன்னு சொன்னா, உடனே “ஏன் முடியாது? முயற்சி செய்தா முடியாதது எதுவுமே இல்ல”ன்னு களத்தில் இறங்கி விடுவாய்.
உன் போராட்ட குணம், விடாமுயற்சி, கடின உழைப்பு—இவை எல்லாம் பார்த்தால், இன்னும் கொஞ்சம் பெரிய நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தா, பல உயரங்களைத் தொட்டு கோடீஸ்வரி ஆகிருப்பாய் என்று நினைக்கத் தோன்றும்.
நான் கொசவபட்டியில் படித்தபோது, புத்தகத்தை அப்படியே நோட்டுப் புத்தகத்தில் எழுதி வரச் சொல்லி நிறைய வீட்டுப்பாடம் கொடுப்பார்கள்.
அதை நீ பொறுமையாக எனக்காக எழுதி கொடுப்பாய்.
ஒரு முறை இந்தியா வந்த போது, ஒரு நோட்டுப் புத்தகம் முழுக்க உனது கையெழுத்தில், எனது வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தை பார்த்து நெகிழ்ந்தேன்
கொசவபட்டியில் இருந்தால், வெளியே போகும் முன் இரண்டு சேலைகளை காட்டி, “எந்த சேலை நல்லா இருக்கு?”ன்னு என்னிடம் கேப்பாய்.
நான் சொன்ன சேலையை கட்டிக்கிட்டு வெளியே போவாய்.
“நான் சொன்ன சேலையை, அக்கா கட்டுகிறது” என்று எனக்கு சந்தோசமாக இருக்கும்.
நான், சின்னப் பையனாக இருந்தபோது, கொசவபட்டிக்கு, ரீட்டா அக்கா, ப்ளோரா அக்கா மற்றும் நீ என்று யார் வந்தாலும், நான் கேட்கும் முதல் கேள்வி, “நீங்க எப்ப ஊருக்கு போவீங்க” என்பதுதான்.
அதை கேட்டு உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
ஆனால், நான் கேட்க விரும்பியது, “நீங்கள் எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்” என்பதுதான்.
பெரியதாக யாரோடும் பேசமாட்டேன் என்றாலும், வீட்டுக்கு, புதியதாக யாரு வந்தாலும் எனக்கு குதூகலமாக இருக்கும்.
வீட்டில் கடைசி பிள்ளை என்பதால் “அம்மா செல்லமாக” இருந்தேன்.
சாப்பாட்டில் தனக்கு வரும் கறியை எனக்கு கொடுப்பார்கள்.
தனக்கு வரும் முட்டையை எனக்குத் தருவார்கள்.
பல சமயங்களில் நானே பல சமயங்களில் அவர்களின் தட்டில் இருந்து எடுத்துக்கொள்வேன்.
ஒருமுறை நான் அப்படி எடுப்பதை பார்த்த நீ, “அம்மா பங்கை ஏன் எடுக்கிறாய். எடுக்காத” என்று சொல்ல
நான் சட்டை செய்யாமல் மீண்டும் எடுக்க, நீ கோபமாக, “இந்தா, எல்லாத்தாயும் நீயே தின்னு” என்று உன் பங்கையும் எனக்கு கோபமாக கொடுக்க, நான் அதையும் கொஞ்ச கூட குற்ற உணர்வு இல்லாமல் வாங்கி கொண்டேன்.
இப்போ நினைக்கும்போது, “எவ்வளவு தான்தோன்றித்தனமா இருந்திருக்கோம்!”ன்னு தோணும்.
அம்மா மீதான உனது பாசமும், நியாய உணர்வும் வெளிப்பட்ட தருணம் அது.
பெண்களுக்கு, இயல்பாகவே இருக்கும், கருணை மிக்க, தாயுள்ளம் உன்னிடம் கொஞ்சம் கூடுதலா இருக்கும்.
மற்றவரது வலி கண்டு, கலங்கி, சட்டென்று உடைந்து அழுது விடுவாய்.
“மன வலிமை கொண்ட அக்கா, இவ்வளவு ஈர மனசோட இருக்கிறதே” என்று நான் நினைப்பதுண்டு.
நான் உன்னிடம் phone பேசும்போதெல்லாம், நீ இப்போது எந்த Project -ல் முனைப்பாக, சுறுசுறுப்பாக இருக்கிறாய் என்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பேன்
உன்னிடம், எப்போதும் ஒரு முயற்சி, ஒரு இலக்கு, ஒரு காரியத்துக்கான உழைப்பு நிச்சயம் இருக்கும்.
50 வயதுக்கு அப்புறம் பல ஆண்கள் உடம்பாலும் மனசாலும் தளர்ந்து, “என் உயரம் இவ்வளவுதான்” என்று உணர்ந்து ஓய்வுக்கு தயாராகிடுவாங்க.
ஆனா நீ இன்னும் உற்சாகமா, உத்வேகமா, சுறுசுறுப்பா ஓடிக்கொண்டே இருக்கிறாய்.
அதைப் பார்த்து எனக்கு எப்போதும் வியப்பு.
“மனதில் உறுதி வேண்டும்” சுகாஷினி போல எப்பொழுதும் சுறுசுறுப்பாக, ஓடிக்கொண்டே இருக்கிறாய் என்று நான் சொல்வதுண்டு.
பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் நாம தேர்ந்தெடுக்க முடியாது.
நல்ல பெற்றோரும் நல்ல உடன்பிறந்தவர்களும் கிடைத்தால் அது பெரிய வரம்.
அந்த வகையில், நீ எங்களோடு பிறந்தது எங்களுக்கு கிடைத்த வரம்.
யாரையும் சுடு சொல்லால் காயப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை.
அமைதியா, பொறுமையா, சூழ்நிலைகளையும் மனிதர்களையும் கடந்து போய்விடுவாய்.
நாம் இருவரும் மே மாதத்தில் பிறந்தவர்கள். ஏழு நாள் இடைவெளியில்தான் நம்ம பிறந்தநாட்கள் வரும்.
ஒவ்வொரு வருடமும் தவறாமல் கூப்பிட்டு வாழ்த்து சொல்லுவாய்.
அமெரிக்காவில் பனிப்புயல், காட்டுத்தீ, பெரும் மழை என்று news-ல வந்தாலே உடனே phone பண்ணி, “பத்திரமா இருக்கியா?”ன்னு கேட்பாய்.
அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று எல்லா உறவுகளும் கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டசாலி நீ.
இயற்கையிலயே அதிர்ஷ்ட்டசாலியான நீ உனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பால் அதிர்ஷ்ட தேவதை எப்போதும் உன் அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டாய்.
உடல்நலத்தைக் காப்பதில் அக்கறை… மனதில் எப்போதும் உத்வேகம்… உற்சாகம்… சுறுசுறுப்பு… அதோடு நம்ம அய்யாப்பன், அப்பாயி, அம்மாவிடம் இருந்து வந்த நீண்ட ஆயுள் தரும் மரபணு—இவை எல்லாம் சேர்ந்து, நீ, நூறு வருடம், ஆரோக்கியமா, சந்தோஷமா வாழப்போறது நிச்சயம்.
இதே போல, உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்தோடு மேன்மேலும் வளர, பல்லாண்டுகள் சந்தோஷமாக வாழ மனமார வாழ்த்துகிறேன்.
அன்புத் தம்பி,
அன்பு


