கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண் தொடி கண்ணே உள
பொழிப்பு (மு வரதராசன்): கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
ஆணின் பார்வையில் அவன் அனுபவிக்கும் இன்பங்கள் பெண்ணிடம் உள்ளன என்று சொல்வது போல் இருக்கும். ஆண் அடையும் இன்பத்தை சொல்வதாக இருந்தால், “அறியும் ஐந்தின்பமும் ஒண் தொடி கண்ணே உள” என்று போட்டிருக்கலாம்.
ஆனால் வள்ளுவர் சொல்வது அந்த ஐந்து புலனும் அந்த பெண்ணிடம் உள்ளன என்று. காணும் புலனும், கேட்கும் புலனும், உண்ணும், உயிர்த்தும் உற்றும் அறியும் புலன்கள் அவளிடம் உள்ளன என்கிறார்.
இவன் காண்பதால் இவன் அடையும் இன்பத்தை சொல்லவில்லை. அவள் காண்பதால் இவன் அடையும் இன்பத்தை பேசுகிறது. ஐந்து புலன்களால் அவள் செய்யும் செயல்களால் இவன் அடையும் இன்பத்தை பேசுகிறது.
ஆண் முனைந்து சென்று பெண்ணிடம் இன்பம் கொள்வது இயற்கை. அதைவிட பெண்ணும் முனைந்து வந்து, சரிக்கு சரி விளையாடி, அவளும் அனுபவித்து, அதன் ஊடே ஆணுக்கும் அளிக்கும் இன்பம் ஒரு படி மேலானது. அந்த ஒருபடி மேலானதையும் இந்த குறள் சொல்வதாக கொள்ளலாம்.
ஐம்புலனும் என்ற சொல்லைப் போட்டு, விரிப்பதற்கு இடம் கொடுக்கிறார். ஐம்புலனும் இவளிடம் உள என்று அப்படியே வைத்து பெண்ணுக்கும், ஐம்புலனால் அடையும் இன்பங்கள் இவளிடம் உள என்று நீட்டி ஆணுக்கும் இந்த குறளை பொருள் கொள்ளலாம்.


