அன்பிலார் எல்லாம் தமக்குரியார் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

என்பு – எலும்பு. இந்த குறளுக்கு அன்புடையார் தம் எலும்பையும் தருவர் என்று நேரடிப்பொருளில் சொல்லாமல் உடலையும் தருவர் என்பது பரவலான உரை.

நம்மில் பலர் அன்பானவர்கள்தான் ஆனால் அத்தனை பேரும் உடலையோ, உயிரையோ தருவதற்கு தயாராக இருப்போமா?

சுந்தர காண்டம், கடல் தாவு படலத்தில் வரும் ஒரு வரி. யாக்கைக்கு என்பிற்சிறந்தாய தோர் ஊற்றம் உண்டு என்னல்ஆமே – உடலுக்கு எலும்பை விட சிறந்த வலிமை கொண்ட எதுவும் இல்லை.

கம்பன் வரிகளைக் கொண்டு வேறு ஒரு பொருள் கொள்ளலாம்.

உடலுக்கு எலும்பு மிகவும் வேண்டிய ஒன்று. குருதி சுரப்பதே எலும்பில் இருந்து. உடலுக்கு ஆதாரமானது எலும்பு.

உடல் நிற்பதே எலும்பால். உடல் மறைந்தாலும் எலும்பு சில நூறாண்டுகள் நிலைக்கும். அதன் அடிப்படையில் அன்பு உடையவர் தனக்கு எது மிகவும் தேவையோ, ஆதாரமோ, வலிமையோ அதையும் பிறருக்கு கொடுப்பர்.

தான் மறைந்த பிறகும் நிலைத்து இருக்கும் செல்வம், அறிவு போன்றவை பிறருக்கு பயன்படும்படி செய்வர் என்ற பொருளும் கொள்ளலாம்.