இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்

(அதிகாரம்:சூது குறள் எண்:940)

இரா சாரங்கபாணி உரை: பொருளை இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கும் சூதாட்டம் போல, உடல் துன்பத்தால் வருந்த வருந்த உயிர் அதன் மேல் காதலுடையதாகும்.

இந்த அதிகாரத்தின் பேசுபொருள் சூது.

இழக்கும் தோறும் சூதை மேலும் விரும்புவது என்று சொல்வது சரி.

துன்பம் வரும்போது உயிர் மேலும் விரும்பும் என்று ஏன் சொல்ல வேண்டும்?

இவர் பேச வந்தது சூதின் விளைவுகளைப்பற்றி. காதலிப்பது என்பது பொதுவாக இருக்கிறது.

ஆனால் சூதுக்கும், துன்பம் வரும்போது உயிர் காதலிப்பதற்கும் என்ன பொருத்தம்?

உவமையும் உவமேயமும் ஒட்டாதது போல் இருக்கிறதே?

இப்படி புரிந்து கொள்கிறேன்

முதுமையின் காரணமாகவோ, அல்லது தீர்க்க இயலாத காரணங்களாலோ, உடல் துன்பத்தில் உழலும்போது, உயிர் உடலின் மேல் கொள்ளும் காதல், சூதாட்டத்தில் தோற்பவனுக்கு வரும் காதல் போல், உடல் துன்பத்தை, நோயை, சரிப்படுத்திவிடலாம் என்று நேரம், ஆற்றல், சமயத்தில் வாழ் நாள் சேமிப்பு முழுதும் செலவு செய்து, மேலும் கடன் வாங்கி மொத்தமும் இழக்கும் நிலையை உயிர் உடலுடன் ஆடும் சூது என்று கொள்ளலாம்.

9 குறள்களில் மானுடம் பொருளை வைத்து ஆடும் உலகியல் சூதின் இழப்புகளை பேசும் வள்ளுவர், இந்த குறளில் உடலை சிறிது சிறிதாக இழக்கும் தோறும், உயிர் ஆடும் சூதை பேசுகிறார். சூதாடும் உயிர்.

என்னமா சொல்லிட்டார்!