அன்புள்ள ரூம்மேட்டுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
1997 ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன்.
திருவல்லிக்கேணி வீதிகளில் ரூம் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய காலேஜ் சீனியர், சிதம்பர பாரதியை எதேச்சையாகப் பார்த்தேன்.
“ஒரு மேன்ஷனில் ரூம் இருக்கிறது. எனக்குத் தெரிந்த திருவண்ணாமலைக்கார பையனோடு தங்கிக்கொள்ளலாம்” என்றார்.
மூன்றாவது மாடியில் இருந்த அந்த ரூமில்தான் உன்னை முதன்முதலாகப் பார்த்தேன்.
அப்போது தொடங்கிய நட்பு, 29 வருடங்களாகத் தொடரும் என்று நாம் இருவருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
நான் அதுவரை பார்த்த மனிதர்களில் வித்தியாசமான மனிதனாகவும், என்னுடைய அலைவரிசைக்கு ஒத்துப்போகும் மனிதனாகவும் நீ இருந்தாய்.
என்னைப் போலவே பொறுப்பான பையனாய் இருந்தாய். நீயும் என்னைப் போல புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாய்.
கை வைத்த வெள்ளை பனியன் போட்டு, கணுக்கால் வரை வேட்டி கட்டியிருப்பாய். சில நேரங்களில் டிரௌசர் போட்டிருப்பாய்.
“இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்” என்ற நிலையாமை மனநிலையில், எளிமையாக இருப்பாய்.
அளவாகச் சாப்பிட்டாலும், உயர் ரக, சுவைமிக்க உணவையே சாப்பிட வேண்டும் என்று நினைப்பாய்.
நான், அம்மா மெஸ், தாத்தா மெஸ் என்று சுற்றியிருந்த ஏதாவது ஒரு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு வருவேன்.
ஆனால் நீ,“சரவண பவனில் ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு, ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிச்சா திவ்யமா இருக்கும்யா!” என்பாய்.
“இட்லியில் என்னய்யா திவ்யம்?” என்று நான் நினைத்துக்கொள்வேன்.
“எப்படி இட்லியும் வடையும் மட்டும் போதும்?” என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த இளம் வயதில், இட்லியும் வடையும் எனக்கு கால் வயிற்றுக்குக் கூடப் பத்தாது.
கர்நாடக இசையில் விருப்பம். காபியை விரும்பிக் குடிப்பாய். Strong-ஆக இருந்தால் இன்னும் நல்லது.
சுத்த சைவம்!
ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம்.
இதை எல்லாம் பார்த்தால், நீ முற்பிறவியில் Brahmin-ஆகப் பிறந்திருப்பாயோ என்ற சந்தேகம் எனக்கு வந்ததுண்டு.
பாலகுமாரனின் தீவிர ரசிகனாக இருந்தாய்.
நான் அடிக்கடி Charlie Munger-ஐ வம்பிழுப்பதைப் போல, நீ சும்மா இருக்கும் ராமன், பரதன், தர்மன் எல்லோரையும் வம்பிழுப்பாய்.
ஏதாவது விவாதம் என்றால்,
“இப்படித்தான் ஒரு தடவை ராமர்…” என்று ராமாயணம் அல்லது மகாபாரதத்திலிருந்து உதாரணம் சொல்லி விவாதத்தில் வெல்லப் பார்ப்பாய்.
நான் அதுவரை தங்கியிருந்த ரூம்களில் யாரும் பழங்கள் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். ஆனால் நீ பப்பாளிப் பழம் வாங்கிவந்து, பொறுமையாக வெட்டி, “இந்தய்யா… சாப்பிடு” என்று கொடுப்பாய்.
தனிமையை ரசிப்பாய்.
“எங்கய்யா ஆளைக் காணோம்?” என்று கேட்டால்,
“பீச்சுக்குப் போயிருந்தேன்” என்பாய்.
இயல்பாகவே குறும்பும் சேட்டையும் செய்யும் மனிதனாக இருந்தாய்.
“யோவ், condom-ன்னா என்னய்யா?” என்று கேட்பாய்.
நானும் அப்பாவியாக அதற்கு விளக்கம் சொன்னால்,
“யோவ், dildo-ன்னா என்னய்யா?” என்று கேட்பாய்.
படுத்திருக்கும்போது “ஊஊஊஊ” என்று சத்தம் போட்டுவிட்டு,
“யோவ், devil-யா?” என்பாய்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், உன்னிடம் சொன்னால் அதற்கு நல்ல ஒரு தீர்வு சொல்வாய்.
Great advisor and guide!
அந்த வயதை மீறிய முதிர்ச்சியும், பக்குவமும்,பெரியமனிதத் தோரணையும் உன்னிடம் இருந்தது.
இந்த 29 வருடங்களில் உன் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு முறை, அறையில் இருந்தபோது, “யோவ்…ஏன்யா, எல்லோரோடயும் சண்டை போடுற?” என்றாய்.
அந்த ஒரு சிறிய அவதானிப்பு/விமர்சனம் என்னை நானே உணர வைத்தது.
என்னோடைய கருத்துக்களை, அழுத்தமாக, பலமாக, தீவிரமாக சொல்பவன். அதோடு, பிடிவாதமும் இருப்பதால், மிக எளிதாக வாக்கு வாதங்களில் ஈடுபடும் இயல்புள்ளவன். நீ சொன்னது எனக்கு என்னைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போதெல்லாம், “கடிதோச்சி மெல்ல எறிய” பழகிக் கொண்டேன். அல்லது விவாதம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களை தவிர்க்கிறேன்.
அறையில் இருந்தபோது, என்னைப் போலவே மிகத் தீவிரமாக, அழுத்தமாக, பலமாக கருத்துக்களை முன் வைப்பாய். இப்பொழுது, என்னைப் போலவே மிருதுவாகி விட்டாய். ஒவ்வாத, வேறுபட்ட கருத்துக்களை தவிர்த்து விடுகிறாய்.
அந்த வயதில் எந்த இளைஞனும் அப்பாவோடு அவ்வளவு நெருக்கமாக இருக்க மாட்டான். ஆனால் நீ, உன் அப்பாவோடு மிகுந்த பாசத்தோடும் நெருக்கத்தோடும் இருந்தாய்.
அப்பாவைப் பற்றி அடிக்கடி பேசுவாய்.
எந்தச் செயலைச் செய்வதற்கும் முன் நிதானமாகவும் பொறுமையாகவும் சாதக-பாதகங்களை ஆராய்ந்து முடிவு செய்வாய்.
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டாய்.
பொறுமையும் பொறுப்பும் உன்னிடம் இயல்பாகவே இருக்கும்.
கவனக்குறைவாக இருக்க மாட்டாய். சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்துவாய்.
Attention to detail!
“ஏன்டா பெத்தோம்?” என்று பெற்றோர் நினைக்கும்படி சில பிள்ளைகள் மனக்கஷ்டத்தை கொடுத்து விடுவார்கள்.
ஆனால் சுய ஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் உனக்கு மிக இயல்பாகவே வாய்த்திருந்தன.
பணிவான, எளிமையான, கருணை மிக்க, பெற்றோர் சொல் கேட்கும் பிள்ளை நீ.
நியாய உணர்வும், அறமும் ஒருவனது வாழ்க்கையில் மிக முக்கியமானவை என்று நீ நினைப்பாய்.
செயலூக்கம் நிறைந்த, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மிக்க, அறிவு மட்டுமல்லாமல் புத்திசாலித்தனமும் நிறைந்த உன்னைப் பெற்றதற்கு, உன் பெற்றோர் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
பெற்றோர் வேண்டித் தவம் இருந்தாலும், இப்படி ஒரு மகன் கிடைத்திருக்க மாட்டான்.
உன்னுடைய பெற்றோர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.
ரஜினியை நேரில் பார்த்து, பேசிவிட்டு வருபவர்கள், அவர் மேல் impress ஆகி, ரஜினி போலவே பேசிக் காட்டுவார்கள்.
அது போல, நீயும் மிக எளிதாக மற்றவர்களை impress செய்துவிடுவாய்.
Extremely impressive personality!
உன்னோடு பழகிய யாரும் “உன்னைப் பிடிக்காது” என்று சொல்ல மாட்டார்கள்.
சகிப்புத்தன்மையும்(Tolerance) விட்டுக்கொடுக்கும் மனமும்(Flexible), தாராள மனமும்(Generous) இருப்பதால், எல்லோருக்கும் உன்னைப் பிடித்துவிடும்.
பிரச்சனை என்னவென்றால், ஒரு அழகிய பெண் உன் மேல் impress ஆகி, உன்னிடம் வந்து,
“Hello handsome! Please come to my place for dinner tonight” என்றால்,
“அச்சச்சோ… நான் இப்ப salad diet-ல இருக்கிறேன். இன்னொரு நாளைக்கு பார்ப்போம்” என்று சொல்லும் ஆள் நீ.
இதற்கான காரணத்தை, உன் பாணியில் சொல்வதென்றால், “ராமனின் அம்பு குறி தவறாது. ஏனென்றால், அவன் கவனம் முழுக்க, குறியில் மட்டும்தான் இருக்கும்.”
சிலரது இருப்பு பதட்டத்தையும் பரபரப்பையும் உண்டாக்கும்.
ஆனால் உன்னோடு இருந்தால், பேசினால், மன அமைதியும் நிம்மதியும் வரும்.
Calming presence!
என்னைப் போன்றவர்கள், பிரயாணங்களில் வரும் இன்னல்களையும், இடையூறுகளையும் எண்ணி, யோசித்துக்கொண்டு இருக்கும்போது, நீ, “அதெல்லாம், பார்த்துக்களாம்யா“, என்று bag-ஐ தூக்கிக்கொண்டு கிளம்பி விடும், பிரயாணக் காதலன்.
அண்ணன் பிள்ளைகள், அக்கா பிள்ளைகள் என்று குழந்தைகள் மத்தியில் வளர்ந்தாலும், “அவர்களிடம் பேச என்ன இருக்கிறது?” என்ற மனநிலையில்தான் நான் இருப்பேன். என் தனி உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பேன். இப்போதும் அப்படித்தான்.
ஆனால் உனக்கு குழந்தைகள் மேல் அலாதிப் பிரியம்.
“ராஜா, கண்ணா” என்று அழைத்து, பிரியமும் பரிவும் பாசமும் கலந்து பேசுவாய்.
ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லி புரியவைக்கும் திறமை உன்னிடம் இயல்பாகவே இருக்கிறது.
கூடவே பொறுமையும் இருப்பதால், ஆசிரியப் பணி உனக்கு பிடித்தமான வேலை.
இந்தியாவில் இருந்தபோதும், Computer Coaching நிறுவனங்களில்தான் வேலை செய்தாய்.
நல்ல மகன், நல்ல அப்பா, நல்ல கணவன், நல்ல நண்பன் என்று எல்லா பாத்திரங்களிலும் உன்னைப் போல சிலரால்தான் சிறப்பாகச் செயல்பட முடியும்.
ரசனை மிக்க மனிதன்!
எதையும் “கடனே” என்று செய்ய மாட்டாய்.
சாப்பிடுதல், சமைத்தல், இசை கேட்டல், வாசித்தல், படித்தல் என்று எதைச் செய்தாலும், ரசித்து, ஈடுபாட்டோடு செய்வாய்.
சிலர் சமைத்தால் ஒவ்வொரு முறையும் ஒரு சுவையில் இருக்கும்.
ஆனால் நீ, கைதேர்ந்த chef போல, சிரத்தை எடுத்து, எல்லாவற்றையும் சரியான அளவில் போட்டுச் சமைப்பாய்.
ஒவ்வொரு தடவையும் சுவை மாறாமல் இருக்கும்.
கடினமான சூழ்நிலைகளில் இருந்து, மீண்டு வரும் Resilience உனக்கு இயல்பிலேயே அதிகம். எதையும் நேர்மறையாக, “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று நினைப்பதுதான் காரணம். எப்போதும் சிரித்த முகத்தோடு, மகிழ்ச்சியாக இருப்பதற்கும் இதுதான் காரணம். Extreme Optimism!!
திருக்குறளைப் படித்தால், அதை பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, நிறைய விளக்கங்கள் தருவாய்.
உனக்குப் பிடித்த சில குறள்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றிற்கு விளக்கம் எழுதலாம்.
அன்புத் தோழனாக மட்டும் அல்லாமல், அறிவுத் தோழனாகவும் நீ எனக்கு அமைந்தது நான் செய்த பாக்கியம்.
நீ இதே போல சிரித்த முகத்தோடு, சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
ரூம்மேட்

