அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.
இது இன்று வகுப்பில் விளக்கிய குறள்.
விளக்கம் சொல்லிவிட்டு பலகையில் எழுதி ஒரு மாணவரை படிக்கச் சொன்னோம். திக்கி திணறி தப்பும் தவறுமாக படிக்கப்பட்டது.
இதை மனப்பாடமாக சொல்ல முடியுமா?
படிக்கவே திணறுது இதை எப்படி மனப்பாடமாக சொல்வது என்ற மலைப்பு மாணவரிடம். சரி திரும்பவும் படி. முடித்தவுடன் திரும்பவும் படி.
ஒரு ஐந்து முறைக்குப் பிறகு அவ்வளவுதான் விட்டுடுவாங்கனு நினைத்திருக்கலாம்.
ஆனால் மீண்டும் படி. இது சரியாக வரும்வரை விடமாட்டார்கள் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.
அதன் பிறகு கவனம் குவிந்தது. திரும்பவும், திரும்பவும், திரும்பவும் படி. ஒரு இருபது முறைக்குப் பிறகு, இப்போது பார்க்காமல் சொல்.
மாணவர் கண்ணை மூடி பார்க்காமல் மிகச் சரியாக குறளை சொல்ல
மனப்பாடமாக சொல்ல முடியுமா என முதலில் மலைத்தோம் இருபது முயற்சிக்கு பிறகு கண்ணை மூடி சொல்கிறோம்.
இதைத்தான் வள்ளுவர் இந்த குறளில் சொல்கிறார் என்று சொல்ல, மாணவர்க்கு அந்த குறளை செயல்முறையில் கண்ட தெளிவை கண்டோம்.
இந்த குறளை படித்திருக்கிறோம்.
ஆனால் அதை மாணவர்க்கு விளக்கும்போதுதான், உண்மையில் அதன் பொருள் உரைக்கிறது.
உண்மையில் கற்பது கற்பிக்கும்போதுதான்.


