நீரோ மன்னன், ரோமில் ஏற்பட்ட பெரும் தீ விபத்திற்குக் கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, அவர்களில் சிலரை உயிரோடு எரித்துக் கொன்றான்.

கிறிஸ்தவர்கள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டனர். ரோமப் பேரரசின் அரங்குகளில் அவர்கள் சிங்கங்கள் போன்ற காட்டு விலங்குகளுக்கு இரையாக விடப்பட்டனர்.

பின்னர் ரோமப் பேரரசின் அதிகார மையம் ரோமிலிருந்து கான்ஸ்டான்டினோப்பிளுக்கு (Constantinople) மாற்றப்பட்டது. அதுதான் இன்றைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் (Istanbul).

கி.பி. 306-ல் பேரரசராக உயர்ந்த கான்ஸ்டன்டைன் மகா பேரரசர் (Constantine the Great), கிறிஸ்தவத்தை ஆதரித்த முதல் ரோமப் பேரரசராகப் புகழ்பெற்றார். பின்னாளில் அவர் கிறிஸ்தவத்தைத் தழுவினார்.

அவருடைய தாய் மிகவும் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். அவர் கிறிஸ்தவராக மாறியதும், அவரது கிறிஸ்தவ நம்பிக்கையும் கான்ஸ்டன்டைனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

அவர் Constantius Chlorus என்ற ரோம அரச அதிகாரி மற்றும் படைத்தளபதியுடன் வாழ்ந்தார். ஆனால் அரசியல் மற்றும் பதவி உயர்வுக்காக Constantius அவரைப் பிரிந்து, உயர்குடியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை மணந்தார்.

வாழ்க்கை அத்துடன் முடிந்துவிடவில்லை.

ஒரு காலத்தில் கைவிடப்பட்ட அந்தப் பெண்ணின் மகனே பின்னர் ரோமப் பேரரசின் பேரரசராக உயர்ந்தார்.

அந்தத் தாய்தான் புனித ஹெலேனா (St. Helena).

ஒரு சாதாரண சமூகப் பின்னணியிலிருந்து வந்த பெண், ரோமப் பேரரசின் மிக உயர்ந்த பெண்களில் ஒருவராக உயர்ந்து, தனது முதிய வயதிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து கிறிஸ்தவ புனித இடங்களைப் பாதுகாக்க முயன்றார்.

ஹெலேனாவின் வாழ்க்கையில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்வு, அவர் சுமார் 80 வயதை நெருங்கிய காலத்தில் மேற்கொண்ட புனித பூமிப் பயணம்.

சுமார் கி.பி. 326–328 காலத்தில் அவர் ஜெருசலேம் (Jerusalem) மற்றும் இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல பகுதிகளுக்குச் சென்றார். அங்கு கிறிஸ்தவ புனித இடங்களை அடையாளம் காணவும், தேவாலயங்கள் அமைக்கவும் அவர் ஆதரவளித்தார்.

அதனால் கத்தோலிக்க, கிழக்கு ஆர்த்தடாக்ஸ் மற்றும் பல கிறிஸ்தவ மரபுகளில் அவர் இன்றும் Saint Helena — புனித ஹெலேனா என்று போற்றப்படுகிறார்.

St. Helena, ஏன் பெரும்பாலும் சிலுவையுடன் சித்தரிக்கப்படுகிறார் என்று தெரியுமா?

கிறிஸ்தவ மரபின்படி, இயேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தப்பட்ட சிலுவையைத் தேடும் முயற்சியை புனித ஹெலேனா மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது.

அவர் ஜெருசலேமில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்பட்ட இடத்தில் தேடுதல் மற்றும் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு, இறுதியில் இயேசுவின் சிலுவையைக் கண்டுபிடித்தார் என்பது கிறிஸ்தவ பாரம்பரிய நம்பிக்கை.

அதனால்தான் புனித ஹெலேனா பெரும்பாலும் கையில் சிலுவையை ஏந்தியபடி சித்தரிக்கப்படுகிறார்.

ஆனால், அவர் உண்மையிலேயே இயேசுவின் சிலுவையைக் கண்டுபிடித்தார் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

St. Helena மதம் மாறியவர்களின் புனிதராக கருதப்படுகிறார்.

St. Helena, திருநாள் நவம்பர் 24 அன்று நினைவுகூரப்படுகிறது.